search results

Thursday, 12 May 2011

நமது விவசாயம் பற்றிய அடிப்படை உண்மைகள் – எஸ். குருமூர்த்தி

நமது விவசாயம் பற்றிய அடிப்படை உண்மைகள் – எஸ். குருமூர்த்தி
மத்திய பட்ஜெட் – 3
சென்ற இதழ் தொடர்ச்சி
சென்ற வாரம் நமது விவசாயம் பற்றி நாம் அறிந்த சில உண்மைகளின் சுருக்கம் இதோ:

62 சதவிகிதத்துக்கும் அதிகமான விவசாய உற்பத்தி, விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் தேவைகளுக்காகவே உபயோகப்படுகிறது. ஏன், அவர்களுக்காகவே உற்பத்தியாகிறது என்று கூடச் சொல்லலாம். அவர்கள் செய்யும் உற்பத்தியிலிருந்து அவர்களுக்கு என்று ஒதுக்கி வைத்துவிட்டுத்தான், மற்றவர்களுக்கு உணவளிப்பது சாத்தியம்.
 
guru_03_05_2011[1].jpg

ஒட்டு மொத்த விவசாய உற்பத்தியைச் சந்தையில் விற்று விட்டு, விவசாயியையும், கிராமத்திலிருக்கும் மற்றவர்களையும் 'உங்களுக்கு வேண்டியதைச் சந்தையில் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினால், அது சாத்தியம் இல்லை. உணவுப் பொருட்களை அவர்களால் விலை கொடுத்து வாங்க முடியாது. தங்களுக்கு வேண்டியதை தாங்களே உற்பத்தி செய்துகொண்டு பண்ட மாற்றம் மூலமாக தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை அவர்கள் பெற முடியும்.


இப்படி விவசாய உற்பத்தியில் 62 சதவிகிதத்தை தங்கள் உபயோகத்துக்கு அவர்கள் எடுத்துக் கொண்டது போக, மீதமுள்ள 38 சதவிகிதமே கிராமங்களுக்கு வெளியே விற்பனையாகிறது. இதற்குக் காரணம், நம் நாட்டில் பெருமளவிலான மக்கள் கிராமத்தில்தான் இருக்கிறார்கள். வருங்காலத்திலும் நம் நாட்டில் மூன்றில் இரண்டு பேர் கிராமங்களில்தான் இருக்கப் போகின்றனர். அதனால் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு தான், வெளியில் இருப்பவர்களுக்கு உணவு கிடைக்க வகை செய்ய முடியும்.

ஆக, மொத்த விவசாய உற்பத்தியில் 38 சதவிகிதம் மட்டுமே கிராமத்துக்கு வெளியே செல்கிறது. இது மட்டும்தான் சந்தைப் பொருளாதாரத்தில் கலக்கிறது. 62 சதவிகிதம் விவசாய உற்பத்தி, சந்தைப் பொருளாதாரத்திற்கு வெளியில் பட்டுவாடா செய்யப்படுகிறது. இது மட்டுமல்ல. இப்படி 38 சதவிகிதம் சந்தையில் கலக்கிற விவசாயப் பொருட்கள் கூட, நவீன சந்தைக்கு வருவதில்லை. பாரம்பரியமான நாட்டுச் சந்தைக்குத்தான் வருகிறது. மத்திய திட்டக் கமிஷனின் ஒரு அறிக்கையில், நம்முடைய விவசாயப் பொருட்களின் வியாபாரம் எப்படி நடக்கிறது என்பது பற்றி விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. அதன் சுருக்கம்:
அடித்தளத்தில் நமது விவசாயப் பொருட்களின் வியாபாரமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எப்படி பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வந்ததோ, அப்படித்தான் இப்போதும் நடக்கிறது. கிராமங்களிலும், நகரங்களை ஒட்டிய பகுதிகளிலும் காலம் காலமாக இருந்து வரும் 47 ஆயிரம் நாட்டுச் சந்தைகள் மற்றும் பாரம்பரியக் கண்காட்சிகளின் மூலமாகத்தான் 90 சதவிகிதம் விவசாயப் பொருட்கள் விற்பனை ஆகின்றன.

இந்த நாட்டுச் சந்தைகள் எப்படி நடக்கின்றன? இந்த 47 ஆயிரம் நாட்டுச் சந்தைகளில் 75 சதவிகித சந்தைகள் வாரம் ஒருமுறையும், 20 சதவிகிதச் சந்தைகள் வாரம் இரு முறையும், 5 சதவிகித சந்தைகள் தினசரியும் கூடுகின்றன. சராசரி 14 கிராமங்களுக்கு ஒரு சந்தை இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தைகள்தான் நமது விவசாய வியாபாரத்தின் அஸ்திவாரம் என்று சொல்லலாம்.

ஆகவே, இந்த 47 ஆயிரம் நாட்டுச் சந்தைகள்தான், அடிப்படை விவசாய வியாபாரக் கேந்திரங்கள் என்று கூறுகிறது திட்டக் கமிஷனின் அறிக்கை. இங்குதான் கிட்டத்தட்ட எல்லா சிறு விவசாயிகளும் தங்களுடைய மகசூலைக் கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள். ஏன், நடுத்தர விவசாயிகள் கூடப் பெருமளவுக்குத் தங்களுடைய விவசாயப் பொருட்களைக் கொண்டு வந்து விற்கிறார்கள். பெரிய பண்ணை விவசாயிகள் மட்டுமே, இந்தச் சந்தைகளுக்கு வெளியே தங்களுடைய விளைப் பொருட்களை எடுத்துச் சென்று விற்கிறார்கள்.

அந்த அறிக்கைப்படி நம் நாட்டில் 6,359 மொத்த வியாபார அங்காடிகள் இருக்கின்றன. இவற்றை வட நாட்டில், 'மண்டிகள்' என்று கூறுவார்கள். இந்த மண்டிகள்தான் நம் நாட்டு விவசாயப் பொருட்களை நகரங்களுக்கு அளிக்கும் வியாபாரத்தின் முதுகெலும்பு என்று கூறலாம். இவையும் பாரம்பரிய வியாபார ஸ்தலங்களே. பல வியாபாரிகள் நாட்டுச் சந்தைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து இங்கு மொத்தமாக விற்பனை செய்கிறார்கள்.

இந்த நாட்டுச் சந்தைகள் வெறும் வியாபார ஸ்தலங்களாக மட்டும் விளங்கவில்லை. அங்கு சமுதாய சம்பந்தப்பட்ட விஷயங்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. திருமண உறவுகள் நிச்சயிக்கப்படுகின்றன. விவசாயப் பொருட்களை வாங்கி விற்பது மட்டுமல்லாமல், கிராம மக்கள் தங்கள் தினசரி தேவைக்கான சோப்பு, செருப்பு, பாத்திரங்கள், துணிகள் மற்றும் விவசாயத்துக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்கிறார்கள்.

ஆக, இந்தச் சந்தைகள் விவசாயத்துடனும், பொருளாதாரத்துடனும் மட்டும் இணைந்தது அல்ல. நாட்டுச் சந்தைகள் குடும்பங்களுடனும், சமுதாயத்துடனும், கலாச்சாரத்துடனும் இணைந்தவை. இது கிராமவாசிகள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், திட்டக் கமிஷனுக்கு தன்னுடைய ஆய்வுக் குழுவின் மூலமாக 2007-ல்தான் தெரியும். அதுவும் யார் யார் அந்த அறிக்கையைப் படித்தார்களோ,
அவர்களுக்கு மட்டும்தான் அது தெரிய வந்திருக்கும்.

மாறாக, நவீன சந்தைப் பொருளாதாரம் என்பது பொருளாதாரத்துடன் மட்டுமே இணைந்தது. நவீன சந்தைப்
பொருளாதாரத்திற்கும், சமுதாயத்திற்கும், கலாச்சாரத்திற்கும், ஏன் குடும்பங்களுக்கும் கூட சம்பந்தம் கிடையாது என்று பொருளாதார தத்துவங்கள்
கூறுகின்றன.

யதார்த்த நிலைப்படி, நம்முடைய விவசாய உற்பத்தி மற்றும் வியாபாரத்தின் நிலை என்ன? இன்னும் நமது பெரும்பாலான விவசாய உற்பத்தி, பாரம்பரியமான முறையில், சிறு விவசாயிகளால்தான் செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பொருட்கள், பாரம்பரிய முறையிலேயே பங்கீடு செய்யப்படுகின்றன. இதனால்தான் 62 சதவிகித விவசாயப் பொருட்கள், கிராமங்களிலேயே பங்கீடு செய்யப்படுகின்றன.

பெரும்பாலான மக்கள் சந்தைகளுக்கு நடந்தோ, சைக்கிள்களிலோ, அல்லது மாட்டு வண்டியிலோதான் இன்றும் செல்கிறார்கள். மொத்த விவசாய உற்பத்தியில் 4 சதவிகிதம் மட்டுமே நேரிடையாக மண்டிகளுக்குச் செல்கிறது. இப்படி பாரம்பரிய முறையில் நடக்கும் நமது விவசாயம் மற்றும் விவசாய வியாபாரத்தை, எப்படி மேற்கத்திய நாட்டு வியாபார பாணியில் நடத்த முடியும்? இதுபற்றியும், மேலும் பல அம்சங்கள் பற்றியும் வருகிற வாரங்களில் பார்க்கலாம்.
Courtesy: Thuglak 11-May-2011 Edition.
 

Thanks/Regards,
L. Mukunthan